tet books

time


follow me on fb

Saturday, August 11, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு... தகுதியற்ற தேர்வானது.. தேர்வானது 2000 பேர்தானாம்...

 ஆசிரியர் தகுதி தேர்வை எழுதிய 6 லட்சம் பேரில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் டைப்பில் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றிருந்தன. வினாக்களுக்கு பதில் அளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இரண்டு தேர்வுகளும் மிகவும் கடினமாக இருந்தது. கணித தேர்வுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை. அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை என்று தேர்வு எழுதியோர் குற்றம் சாட்டினர். மேலும், தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று தேர்வாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு தேர்வர்களிடம் இருந்து ஆட்சேபங்கள் கேட்கப்பட்டன. அதன் பின்னர், விடைகள் இறுதி செய்யப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதில், இரண்டு விடைத்தாள்களையும் சேர்த்து சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சராசரியாக 5 சதவீத அளவுக்கு கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் வர உள்ளது. அந்த வழக்கு விசாரணை மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. தேர்ச்சி அடையாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்தும் யோசனையும் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 Dhinamalar TNTET News


டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம், முதல் முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி., ), 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில், "கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்தது; நேரமும் போதவில்லை. இதனால், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை&' என, தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.இதை நிரூபிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் அமைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 10 சதவீத தேர்ச்சியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எதிர்பார்த்த நிலையில், வெறும், 2 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தேர்வு எழுதிய, 5.5 லட்சம் பேரில், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.
டி.இ.டி., தேர்வு மூலம், 7,194 இடைநிலை ஆசிரியர்; 18 ஆயிரத்து, 987 பட்டதாரி ஆசிரியர் என, 26 ஆயிரத்து, 181 ஆசிரியரை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது, டி.ஆர்.பி.,க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு, குறைந்தபட்சம் ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேரை அழைக்க வேண்டும். அந்த வகையில், 78 ஆயிரம் பேர் அழைக்கப்பட வேண்டும். ஆனால், தேர்வு செய்ய உள்ள மொத்த எண்ணிக்கையில், பாதி அளவிற்குக் கூட ஆசிரியர் தேர்ச்சி பெறாததால், வேறு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே வெளியிட்ட விதிமுறைப்படி, 150 மதிப்பெண்களில், தகுதி மதிப்பெண்களாக, குறைந்தபட்சம், 60 சதவீதம் பெற வேண்டும். அதன்படி, 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், மிகக் குறைவானவர்கள் மட்டுமே இம்மதிப்பெண்களை பெற்றிருப்பதால், தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.
ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்; அதை மனதில் கொண்டு, உரிய முடிவை எடுப்போம். இந்தச் சலுகை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்புடன், உரிய முடிவு வெளியிடப்படும்.தேர்வு முடிவில், வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தேர்வு முடிவை வெளியிட முடியாது. இது குறித்து, ஓரிரு நாளில் முடிவெடுத்து, 20ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.
எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவினருக்கு, கூடுதல் சலுகை அளிப்பது குறித்தும், ஆலோசனை நடக்கிறது.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி குறைவாக உள்ளதை காரணம் காட்டி, தகுதி மதிப்பெண்களை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டும் குறைத்து முடிவெடுத்தால், அடுத்த தேர்வுக்கும், இதே தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். இதற்கு, டி.ஆர்.பி., சம்மதிக்காத பட்சத்தில், தேர்வர்கள், கோர்ட்டை நாட வேண்டிய நிலை உருவாகும்.
எனவே, நடந்து முடிந்த தேர்வு உட்பட, இனி நடத்தப்போகும் தேர்வுகளுக்கும், ஒரே தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், நடந்து முடிந்த தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஒரு தேர்வை நடத்த வேண்டும். இந்த இரண்டில், ஏதாவது ஒரு முடிவை எடுக்காவிட்டால், டி.ஆர்.பி.,க்கு சிக்கல் தான். 

1 comment:

  1. http://tamil.sudarnila.com/2012/08/11/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links